மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இத்தேர்வு குறித்த பல்வேறு சந்தேகங்கள் மாணவர்களிடையே இருக்கக்கூடும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி ஒவ்வொரு மாணவருக்கான தனிப்பட்ட திட்டமிடல் குறித்த தெளிவு பலரிடம் இருக்காது. மேலும் பல முறை தேர்வெழுதி முயற்சி செய்தும் மருத்துவ சீட் கிடைக்காமல் இருக்கும் மாணவர்களும் உண்டு, முதல் முறையே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களும் உண்டு. தேர்வுக்கு தயாராவதில் இவர்கள் எந்த விதத்தில் மாறுபடுகிறார்கள்? தெளிவாக விளக்குகிறார் கல்வியாளர் ராஜராஜன்.

“என்னை பொறுத்தவரை 11-ம் வகுப்பு பாடத்தில் கவனம் செலுத்தாதது ஒரு வகையில் தேர்வை கடினமாக்குகிறது. அதை பள்ளிக்கூடங்களும் சொல்லித்தருவதில்லை அதனால் மாணவர்களும் படிப்பதில்லை. அதனால்தான் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வினை கொண்டுவந்தது தமிழக அரசு. CBSE, ICSE போன்ற வேறு எந்த பாடத்திட்டத்திலும் 11-ம் வகுப்பிற்கு பொது தேர்வு என்பது கிடையாது. அதனால் நீட் என்று ஒரு மாணவர் முடிவெடுத்துவிட்டால் 11, 12 வகுப்பு பாடங்களில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதுவும் பொதுத்தேர்விற்கு படிப்பது போல் அல்லாமல் ஒவ்வொரு பாடத்தையும் நுணுக்கமாக புரிந்து படிக்க வேண்டும். நம்மில் சில பேர் Examination point of view என்று சொல்லிக்கொண்டு முக்கியமான கேள்விகளை மட்டும் படித்துவிட்டு தேர்விற்கு செல்வார்கள். அந்த பழக்கம் இந்த தேர்வை பொறுத்தவரையில் எந்த வகையிலும் உதவாது. அதேபோல ஒரே ஒரு முறை தேர்வெழுதி நல்ல மதிப்பெண் எடுப்பவர்களும் உண்டு, பல வருடங்களாக படித்து இன்னும்கூட முயற்சி செய்பவர்களும் உண்டு. இதற்கு நான் முன்னே சொல்லியதை தான் மீண்டும் கூறுவேன். பாடத்தை பற்றிய ஆழ்ந்த புரிதலே இத்தேர்வில் வெற்றி பெற முதல் வழி. உதாரணத்திற்கு gravity என்னும் முக்கிய கான்செப்டை எடுத்துக்கொள்வோம். இதை Question Answer மாதிரியும் படிக்கலாம், Analyse செய்தும் படிக்கலாம், தேர்வில் இந்த கான்செப்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு புத்தகத்தில் இல்லாத ஒன்றையும் வினாவாக கேட்கலாம். அதனால் ஒரு வருடம் படித்தாலும், மூன்று வருடம் படித்தாலும் அப்பாடத்தை பற்றி என்றைக்கு முழு தெளிவான புரிதல் ஏற்படுகிறதோ அன்றைக்கே அம்மாணவன் தேர்ச்சி அடைய முடியும்.

என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் தேர்விற்கான படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கூறுகிறேன். எந்த ஒரு தேர்வையும் 'கடினமில்லை' என்று நம்பிக்கையுடனே மாணவர்கள் அணுகவேண்டும். நாம் 10 மற்றும் 12-ம் வகுப்பில் படிப்பது என்பது வேறு. நீட்டிற்கு படிப்பவர்கள் முதலில் NTA சிலபஸை தெளிவாக பார்க்கவேண்டும். பிறகு இது முக்கியமானது, இது முக்கியமில்லாதது என்று எதையும் ஒதுக்காமல் அனைத்தையும் தெளிவாக புரிந்து படிக்க வேண்டும். நிறைய மாதிரிதேர்வுகளை எழுத வேண்டும். தினமும் இதற்கான 3 மணி நேரம் செலவிட வேண்டும். இதைத்தாண்டி இத்தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட கூடாது.

முக்கியமாக மற்றுமொன்றை கூறுகிறேன். மருத்துவர் என்பது மக்களுக்கான சேவை பணியாகும். அதனால் அலோபதி, BDS  கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல்  சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றிற்கும் முயற்சி செய்யலாம். அனைத்தும் நீட்டிற்கு கீழே தான் வருகிறது. இந்த கொரோனா பேரிடருக்கு பிறகு சித்தா, ஆயுர்வேதம் ஆகிவற்றின் மேல் மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அதே போல நீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் AFMC எனப்படும் புனேவில் உள்ள Armed Force Medical கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம். ராணுவம் நடத்தக்கூடிய அக்கல்லூரியில் படித்துவிட்டால் வேலை என்பது அங்கேயே நிச்சயம். இக்கல்லூரியும் நீட்டிற்கு கீழ் தான் வருகிறது.  முன்பு வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க எந்த தேர்வும் இல்லை. ஆனால் தற்போது அங்கு செல்வதற்கும் நீட் என்பது கட்டாயம். படித்து முடித்து இந்தியா திரும்பும் போதும் மற்றுமொரு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்” என்கிறார் ராஜராஜன்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்