NEET - Exam hall instructions

நீட் தேர்விற்கான பாடங்களை எத்தனை சிறப்பாக படித்தாலும் அத்தேர்வை எழுத செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்தான சந்தேகங்கள் மாணவர்களிடம் நிச்சயம் இருக்கும்.அதை பற்றி முழுமையாக விளக்கமளித்துள்ளார் கல்வியாளர் ராஜராஜன்.

“ நீட் தேர்விற்கு தயாராகும் பணி அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வதிலிருந்து தொடங்குகிறது. இதை மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனியார் தளங்களில் முந்தைய ஆண்டுகளின் தரவுகளும் இருக்கும் என்பதால் புதிய குழப்பங்களை தவிர்க்க  இந்த தளமே சிறந்தது. ஒருவேளை Registration எண்ணை மறந்துவிட்டால் forget registration number என்ற லிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் வாயிலாக நாம் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்விற்காக விண்ணப்பிக்கும் போது கொடுக்கின்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை இடையில் மாற்றாமல் இருப்பது குழப்பங்களை தவிர்க்கும். அட்மிட் கார்ட் உடன் self declaration ஃபார்ம் ஒன்றும் உடன் வெளியிடப்படும். அதில் கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கைகள், புகைப்படம் மற்றும் விரல் பதிவிற்கான பகுதிகள் ஆகியவை இருக்கும். கோவிட்-19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிப்பேன் என்று அதில் உறுதியளிக்க வேண்டும். இவை அனைத்தும் கொரோனா தொற்று மிக அதிகமாக இருந்த போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள். அதேபோல பதிவிறக்கப்பட்ட அட்மிட் கார்ட்  தொலைந்துபோகும்பட்சத்தில் அது குறித்து பதற்றப்படவேண்டாம். அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் பதிவிறக்கி கொள்ளலாம். அப்படி முடியாவிட்டால் Helpline எண்ணிற்கு அழைத்து கேட்கலாம் அல்லது neet@nta.ac.in  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கலாம்.

தேர்வு மையத்திற்கு மாணவர்கள் எடுத்து செல்லவேண்டிய முதல் பொருள் புகைப்படம். அதாவது விண்ணப்பத்தில் கொடுத்த அதே அளவுள்ள புகைப்படத்தை கட்டாயம் எடுத்து செல்லவேண்டும். இதேபோல ஆதார் அட்டை, பாஸ்போர்ட்,  ஓட்டுநர் உரிமம், தேர்தல் அடையாள அட்டை முதலியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள சான்றை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.  உடல் ஊனமுற்றோர் அதற்கான சான்றையும் எடுத்து செல்ல  வேண்டும். தேர்வு மையத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முன்பாக சென்று விடுவது நல்லது.  கடைசி நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் கிளவுஸ் ஆகியவற்றை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்.தண்ணீர் பாட்டில்களில் தெளிவாக ஒளி புகக்கூடியவை மட்டுமே அனுமதிக்கப்படும் தேர்வு மையத்தில் மாணவர்கள் பயோ-மெட்ரிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேவை இல்லாத எந்த பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. அதே போல உடை அணிவதிலும் சில விதிமுறைகள் உள்ளன. ஃபுல் ஸ்லீவ், ஷூ அணிவதற்கு  முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மெல்லிய, லைட் கலர் உடைகளை அணிந்து செல்வது நல்லது.

தேர்வு அறையில் கண்காணிப்பாளர் முன்பாக அட்மிட் கார்ட் மற்றும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். கேள்வித் தாளில் உள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். OMR தாளில் தான் பதில்கள் எழுத வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் முழுமையாக தெளிவாக பதிவு செய்யவேண்டும்.  மேலும் தேர்வு நடக்கும்போது  அருகில் இருப்பவர்களிடம் பேசக்கூடாது. அது கண்டிப்பாக கண்காணிக்கப்படும். அதேபோல தேர்வு முடியும் வரை காத்திருந்த பிறகே தான்  அறையை விட்டு வெளியே செல்ல முடியும். இவைதான் நீட் தேர்வு சந்திக்க இருக்கும் மாணவர்கள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள். இதை கண்டு யாரும் பதற்றப்பட வேண்டும். எந்த தேர்வை எழுதும்போதும் இருக்கும் அதே மனநிலையுடனே  இத்தேர்வையும் சந்திக்க நான் அறிவுறுத்துவேன். கூடுதலாக மேற்கூறியவற்றை பின்பற்றினாலே போதுமானது” என்று கூறினார் ராஜராஜன்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்