Published: MAR 29, 2024

“பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது”- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

ஒட்டுமொத்த தமிழகமும் பெரம்பலூர் தொகுதியை உன்னிப்பாக உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. காரணம், தமிழகத்தின் கல்வி வள்ளல் எனப்படும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே தொண்டர்கள்.

ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், மறுபடியும் தான் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் தலைவர் பாரிவேந்தர். மேலும் 1,500 ஏழைக் குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐ.ஜே.கே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

முன்னதாக பெரம்பலூர் நான்கு ரோடு மற்றும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்த அண்ணாமலை, இம்முறை ஜ.ஜே.கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தருடன் ஒரு சேர பிரசார வாகனத்தில் ஊர்வலம் வந்து வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது பேசிய அண்ணாமலை, ''பாரிவேந்தரின் நீண்டநாள் கனவான பெரம்பலூர் ரயில் திட்டம் கண்டிப்பாகக் கொண்டுவரப்படும். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது. இம்முறை பாரிவேந்தர் வெற்றிபெற்றால் 1,500 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பாரிவேந்தர். விரைவில், பாரிவேந்தருக்காக பிரதமர் நரேந்திர மோடி பெரம்பலூர் வரவும் திட்டமிட்டிருக்கிறார்” என்றார் அண்ணாமலை.

மேலும், தாமரை சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தரின் வெற்றிக்காக, ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் அடுத்த 20 நாட்களுக்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் அண்ணாமலை. டாக்டர் பாரிவேந்தரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என்றும், பெண்களை அவமானப்படுத்தும் திமுகவின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம் என்றும் அண்ணாமலை பேசினார் .

BACK TO HOME

© vikatan 2024. All Rights Reserved