Published: MAR 29, 2024
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, “2013- ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் பாரிவேந்தர், திமுகவில் அப்பா கே.என்.நேரு மந்திரி! பிள்ளை அருண் நேருவிற்கு பெரம்பலூர் எம்.பி தொகுதி சீட்! ஒரு குடும்பத்திற்கு எத்தனை பதவி தான் கொடுப்பாங்க? திமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இருபதைக் கூட நிறைவேற்றவில்லை,”என சரமாரியாக குற்றம் சாட்டினார்.
மேலும், “பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கூறுகிறார், திமுக ஆட்சியில் பெண்கள் மினுக் மினுக் என இருக்கிறார்களாம். திமுக கொடுக்கிற மகளிர் உதவித் தொகையில் அழகு க்ரீம் வாங்கித் தடவிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்படியா தாய்க்குலத்தை கேவலப்படுத்துவது? பெண்களை மரியாதையாக, பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா,” எனக் கூறிய அண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிகளுக்கான ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றிபெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டர்களும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
விரைவில், பிரதமர் நரேந்திர மோடி, பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க பெரம்பலூருக்குவருகை தர இருக்கிறார் என்றும் பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என்றும் அண்ணாமலை பெருமிதம் பொங்க கூறினார்.