Published: MAR 29, 2024
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெருமை மிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இளையவேந்தர், ''பாரிவேந்தர் மீண்டும் எம்.பி-யானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி, 1,500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்வார்” என உறுதியளித்தார்.
மேலும், ''பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வரவில்லை. அதற்காக அவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அக்கறையில் மட்டுமே போட்டியிடுகிறார்'' என்று தெரிவித்த இளையவேந்தர், டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, முசிறியில் மகளிர் கலைக் கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என மக்களும், விவசாயிகளும் டாக்டர் ரவி பச்சமுத்துவிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ''மூன்று கோரிக்கைகளையும் பாரிவேந்தர் நிச்சயம் நிறைவேற்றுவார், அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.