Published: MAR 29, 2024
எளிமையான ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர் பாரிவேந்தர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் பாரிவேந்தர், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
அதைத் தொடர்ந்து தொகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக பல பணிகளைச் செய்துவருகிறார். உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு, உலகத் தரமான கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்கத்தக்க செயல்களைச் செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற மக்களவை சென்ற டாக்டர் பாரிவேந்தர், மக்களவையில் 268 முறை கேள்விகள் எழுப்பியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற 39 விவாதங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளார். இரண்டு முறை தனிநபர் மசோதாக்களைக் கொண்டுவந்து விவாதங்கள் செய்துள்ளார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, இலவசக் கல்வி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி பெரம்பலூர் தொகுதியில் 1,200 மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை தமது SRM பல்கலைக்கழகம் மூலம் வழங்கினார். இதற்கான கல்விக்கட்டணம் ரூபாய் 126 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவையும் இலவசமாகவே வழங்கியிருக்கிறார் டாக்டர் பாரிவேந்தர். இதைத் தாண்டி தனது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதியில் உள்ள நூறு அரசுப் பள்ளிகளுக்கு, ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான கணினிகளை வழங்கினார்.
டாக்டர் பாரிவேந்தர் தொகுதிக்குச் செய்த உள்கட்டமைப்புகள்
டாக்டர் பாரிவேந்தர் தமது அயராத முயற்சியால், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் செல்லும் ரயில் திட்டத்தை செயல்படுத்த முனைந்தார். பிரதமர், நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரிடம் பல முறை அவர் கோரிக்கை விடுத்து, தற்போது புதிய ரயில் தடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமது சொந்த நிதியிலிருந்து பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, லாரிகள் மூலம் தண்ணீரைத் தந்து குடிநீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வு கொடுத்தார். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும் அவர் பல திட்டங்களைச் செய்தார்.
ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு செய்த பணிகள் என்னென்ன?
டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெரம்பலூர், லால்குடி, துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் செய்த அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் சில:
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைத்துக் கொடுத்தார். கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 39 லட்சம் மதிப்பிலான வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தார். தழுதாழை மற்றும் நெய்க்குப்பை ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக ரூபாய் 20 லட்சம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீர்த் தொட்டி அமைக்க ரூபாய் 2.50 லட்சம், செங்குணம் ஊராட்சியில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க ரூபாய் 3 லட்சம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பெரம்பலூர் மருத்துவமனைக்கு ரூபாய் 40 லட்சம், பெரகம்பி முதல் கண்ணப்பாடி வரை குடிநீர் வழங்குவதற்காக ரூபாய் 24 லட்சம், ராமசாமி மருத்துவமனை பேவர் பிளாக் ரூபாய் 7 லட்சம், வெங்கலம் கிராமத்தில் நியாய விலைக்கடை அமைப்பதற்கு ரூபாய் 9 லட்சம், போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் CCTV கேமரா அமைக்க ரூபாய் 10 லட்சம், வேலூர் ஊராட்சி புதுநடுவலூர் கிராமத்தில் நலத்திட்டப் பணிகளுக்கு ரூபாய் 5.28 லட்சம் உள்ளிட்ட உதவிகளை தமது தொகுதி மக்களுக்கு வழங்கினார்.
தமது லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகள் கட்ட ரூபாய் 56 லட்சம், லால்குடியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ரூபாய் மூன்று லட்சம், அன்பில் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பேவர் பிளாக் அமைக்க ரூபாய் 4 லட்சம், புள்ளம்பாடி ஒன்றியம் வி. கண்ணனூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைக்க ரூபாய் 6.94 லட்சம், அகலங்கநல்லூர் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைக்க ரூபாய் 44 லட்சம், கொன்னைக்குடி ஊராட்சியில் அங்கன்வாடி கட்ட ரூபாய் 14 லட்சம், புள்ளம்பாடி, மால்வாய் அரசுப் பள்ளியில் கழிவறை கட்ட ரூபாய் 7.70 லட்சம், ஒரத்தூர் சமுதாயக் கூடம் அமைக்க ரூபாய் 44 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
தமது துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்திரப்பட்டி, மதுராபுரி ஊராட்சிகளில் சமுதாயக்கூடம் அமைக்க ரூபாய் 31 லட்சம், முருகூரில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு ரூபாய் 13.80 லட்சம், முருகூர் மயானக் கொட்டகை கட்ட ரூபாய் 2. 74 லட்சம், தொட்டியம் அரங்கூர் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
தமது முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு ரூபாய் 35 லட்சம், வெங்கடாசலபுரம் மான்ய துவக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு ரூபாய் 32.56 லட்சம், சாரண சாரணியர் முகாம் கட்டடம் அமைக்க முசிறி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ரூபாய் 27 லட்சம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பைத்தம்பாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 33 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
தமது மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்கு ரூபாய் 2.50 லட்சம், மண்ணச்சநல்லூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 33 லட்சம், சனமங்கலம் ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைக்க ரூபாய் 37.30 லட்சம், சிறுகுடி ஊராட்சிப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் அமைப்பதற்கு ரூபாய் 31.56 லட்சம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
எழுச்சி மிக்கத் தலைவராக டாக்டர் பாரிவேந்தர் செயல்படுவது எப்படி?
டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாக திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் 118 கோடியே 77 லட்சத்தி 51 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உயர்கல்விப் பட்டப் படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு இலவச உயர்கல்வி பெறுவதற்கு உதவி செய்துள்ளார்.
இதனிடையே, கொரோனா பேரிடர்க் கால உதவிகளை ரூபாய் இரண்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சத்து எண்பது ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும். மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூபாய் ஒரு கோடியே ஒன்பது லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூபாய் நான்கு கோடியே எண்பது லட்சத்து எண்பது ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூபாய் 126 கோடியே 90 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளைப் பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர். அவர் மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்பி ஆகி மக்கள் பணிகளைத் தொடர்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.