Published: MAR 29, 2024
பெரம்பலூர் ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தரை ஆதரித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா பரப்புரை மேற்கொண்டார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தரை ஆதரித்து, முசிறி கை.காட்டி பகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பரப்புரையில் பேசிய ஜெ.பி.நட்டா, நாட்டு மக்கள் உயர்வதற்கான உத்தரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளதாகவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்று இருப்பதால் நாடாளுமன்றத்தில் அவர் செங்கோலை நிறுவி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார். ''D.M.K என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டபஞ்சாயத்து என்றுதான் அர்த்தம்'' என ஆங்கில வார்த்தைகளை சுட்டிக்காட்டி விமர்சித்த ஜெ.பி.நட்டா, இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.