Published: MAR 29, 2024
பெரம்பலூர் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கல்வியை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட மருத்துவம் உள்ளிட்ட 12 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தனியார் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டணிக் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அரியலூர்- நாமக்கல் இடையே புதிய ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும், குருவாயூர் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஐ.ஜே.கே. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் விவசாயத் துறையை வலுப்படுத்த உலக வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குளித்தலை நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும், புள்ளம்பாடி மற்றும் லாலாபேட்டையில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், வேந்தரின் இலவச உயர்கல்வி திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட 1,500 ஏழைக் குடும்பங்களுக்கு S.R.M. மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மூலம், தலா ஒரு குடும்பத்திற்கு பத்து லட்சம் மதிப்பீட்டில் இலவச மருத்துவ சிகிச்சைக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய அம்சங்கள் இந்திய ஜனநாயகக் கட்சி தேர்தல் வாக்குறுதியில் இடம் பிடித்துள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் I.J.K. தலைவர் ரவி பச்சமுத்து, I.J.K. பொதுச்செயலாளர் ஜெயசீலன், பா.ஜ.க. மாநில இணை பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியன், ஓ.பி.எஸ். அணி பொறுப்பாளர் R.T. இராமச்சந்திரன், பா.ம.க. மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செல்வராஜ், த.மா.கா. மாவட்டத் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், மாநில விளம்பரப் பிரிவுச் செயலாளர் முத்தமிழ் செல்வன், மாவட்டத் தலைவர் A.V.R.ரகுபதி உள்ளிட்ட பலர் கொண்டனர்.

