Published: MAR 29, 2024
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பூலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, வரும் தேர்தலில் தன்னை வெற்றியடையச் செய்தால் நிச்சயமாக பெரம்பலூர் ரயில்வே திட்டம்,1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம், 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவத் திட்டம் போன்ற பல திட்டங்கள் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார். மேலும் கல்லாற்றில் தடுப்பணை அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், அ.தி.மு.க உரிமை மீட்புக்குழு ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்டத் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் மற்றும் பல கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும், ஐ.ஜே.கே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பரப் பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் பரப்புரையில் கலந்து கொண்டனர்.
அரும்பாவூர் பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தன்னை வெற்றி பெறச் செய்தால் யாரும் முடிக்காத, 50 ஆண்டுகாலக் கனவுத் திட்டமான பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வருவோம் என உறுதி அளித்தார்.
மேலும், பொதுமக்கள் நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கிருஷ்ணாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், அங்கு வட்டாரத் தலைமை மருத்துவமனை, கூடுதல் படுக்கை வசதிகளுடன் அமைத்துத் தரப்படும் எனவும் உறுதி அளித்தார். மேலும், ''உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமென்றால் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து, கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள்'' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.