Published: MAR 29, 2024
''எம்.பி-யாக நான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக, பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு வழங்கியுள்ளேன்'' என்று பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரனாரை பகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் டாக்டர் பாரிவேந்தருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசிய அவர், தான் M.P. நிதியினை தொகுதிக்காக முழுமையாகச் செலவு செய்ததாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக தொகுதியில் செய்த பணிகள் குறித்து, தான் புத்தகமாக பொதுமக்களுக்கு வழங்கி உள்ளதாகக் கூறினார். 2019 தேர்தல் வாக்குறுதியின்படி 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டத்தில் கல்வி வழங்கியதாகவும், அந்தத் திட்டம் தொடரும் என்றும் உறுதி அளித்தார்.
1,500 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்தியாவின் பெருமையை உலக நாடுகள் பேசுவதற்கு, மோடியின் ஆட்சித்திறமையே காரணம் என்று குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க உள்ளதாகவும் டாக்டர் பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து சமத்துவபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு செய்த பணிகளை புத்தகமாக வெளியிட்டது தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் குறிப்பிட்டார். மோடி ஒரு தியாகி என்றும், நாட்டைக் காப்பாற்றுவதற்காக இரவு பகலாக உழைத்துக்கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த டாக்டர் பாரிவேந்தர், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களிடம் பெரம்பலூர் தொகுதிக்காக தாம் செய்த பணிகள் குறித்த புத்தகங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் யாரும் ஊழல் செய்யாதவர்கள் எனவும், தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் ஊழல்வாதிகள் எனவும் கூறினார். ஊழல் கட்சிகளிலிருந்து எம்.பி-யை தேர்ந்தெடுத்தால் அது மிகப்பெரிய பாவம் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்
தொடர்ந்து காமராஜர் வளைவு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொகுதிக்காக செய்த பணிகள் குறித்து புத்தகம் வெளியிட நேர்மை வேண்டும் எனக் கூறிய பாரிவேந்தர், நல்லவர்களை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.