Published: MAR 29, 2024
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், மக்களைக் குடிக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் செய்வதாகவும், மனதை மாற்றி பலர் குடிக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, கீழப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர்,அந்த கிராம மக்களின் கோரிக்கைப் படி அங்கு நிச்சயம் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதேபோல், அழகிய மணவாளம், கோபுரப்பட்டி,சோழங்க நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாரிவேந்தர், திமுக எம்.பி-கள் நாடாளுமன்றத்தை முடக்குவது, தடை செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருவதாகவும், சூரியன் சுட்டெரித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாகவும் தெரிவித்தார். மேலும், நல்லவர்களுக்கு வாக்களித்தால் தங்களுடைய தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னை தேர்ந்தெடுத்தால் 1,500 குடும்பங்களுக்கு மருத்துக்ச் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், மத்திய அரசின் நிதியை முழுமையாக வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு செலவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக சிறுகாம்பூர் பகுதியில் திரண்டிருந்த பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசிய பாரிவேந்தர், 2019-ம் ஆண்டில் தான் மக்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.