Published: MAR 29, 2024
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், வேப்பந்தட்டை ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல்! பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல்! அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும், சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள்! கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்யுங்கள்” என அப்பகுதி வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரப்புரை செய்த அவர், “கடந்த 5 ஆண்டுகளில் (கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில்) நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை பள்ளி வகுப்பறைகள், சமுதாய நலக்கூடங்கள், நியாய விலைக் கடைகள், நீர்த் தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக் கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டிருக்கிறேன்'' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 1,200 ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியிடாத வகையில், ஒரு புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்குக் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள உள்ளூர் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர், பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 1,500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும், தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.