Published: MAR 29, 2024
காலங்காலமாக ஊழலையே தமது குடும்பச் சொத்தாக கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளில் பாதி பேருக்குக் கூட தரவில்லை என பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், RT மலை பகுதியில் 3வது நாளாக பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு தான் செய்த எண்ணற்ற திட்டங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டதாகக் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலிருந்து தேர்வான எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது தொகுதி மக்களுக்காக செய்த சாதனைகளைப் பட்டியலிட முடியுமா என்று சவால் விடுத்தார்.
மேலும், ''பெரம்பலூர் தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவுத் திட்டமான அரியலூர் - நாமக்கல் ரயில் பாதைத் திட்டம் தொடர்பான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன'' என்றார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பெரம்பலூர் பகுதியில் ரயில் பாதை இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ரயில்வே துறைக்கு பாரிவேந்தர் கடிதம் எழுதியிருந்தார். பாரிவேந்தர் எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, அரியலூர் நாமக்கல் இடையே பெரம்பலூர், துறையூர், தாத்தையங்கார் பேட்டை வழியாக 116.26 கி. மீ புதிய ரயில் பாதைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தமது அயராத முயற்சியால் பெரம்பலூர் ரயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கல்வித் தந்தை பாரிவேந்தர் தந்த வாக்குறுதியின்படி 1,200 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் மூலம் உயர்கல்வி அளித்ததைப் போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 1,200 ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதுதவிர பெரம்பலூர் தொகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 1,500 நோயாளிகளைக் கண்டறிந்து இலவச மருத்துவம் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்காரன் பட்டி கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பாரிவேந்தர், 'திமுக ஒரு நாடகக் கம்பெனி' என்றும், 'முன்னொன்று பேசி பின் ஒன்றாக ஊழல் செய்வதில் கெட்டிக்காரர்கள்' என்ற உண்மையையும் உரக்கச் சொன்னார். இப்பகுதி மக்களின் கோரிக்கையான மின் மோட்டார் பொருத்தும் பணி உறுதியாக செய்து தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.