Published: MAR 29, 2024
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் டி.களத்தூர் கிராமத்தில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், 2019-ல் அளித்த வாக்குறுதியின்படி, டி.களத்தூர் கிராமத்திலிருந்து மட்டும், சென்ற ஆண்டு17 மாணவர்கள் SRM பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகக் கூறினார். மேலும், தன்னை மீண்டும் எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தால் இலவச உயர் கல்வித் திட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அடைக்கம்பட்டி கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, தாமரை பூ மாலை அணிவித்து மக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல்வாதிகள் எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், காலம் காலமாக பொய் சொல்லும் தி.மு.க.வினருக்கு வாக்களிக்காதீர்கள் எனவும், குடும்ப ஆட்சி வந்தால் மக்கள் அடிமையாகிவிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சிறு வயலூர் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது M.P. நிதி 17 கோடி ரூபாயை, தொகுதி மக்களின் தேவைகளுக்காக முழுமையாக செலவு செய்து உள்ளதாக கூறினார். மேலும், தான் நல்லவன் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டு, மக்கள் முன் மீண்டும் வாக்கு கேட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, குரூர் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தங்களின் தேவைகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் தான் பேசியது குறித்தும், செய்த பணிகள் குறித்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாக கூறினார். 1,200 மாணவர்களை பட்டதாரியாக்கி, ஏழைக் குடும்பங்களில் விளக்கேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு வரிப்பணத்தை சீனாவில் முதலீடு செய்யும் தி.மு.க. ஆட்சியை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து செட்டிகுளம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தான் வெற்றி பெற்றால் செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தார். மேலும், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாகவும், 1,500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து இலவச உயர் மருத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நாட்டார் மங்கலம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு இருசக்கர வாகனங்கள் புடைசூழ உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அவர், நாட்டார்மங்கலம் கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், M.P. நிதி 17 கோடி ரூபாயை முழுமையாக செலவு செய்துள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகுதான் நாடு பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், நாடு பொருளாதாரத்தில் வளர்ந்தால் அனைவரும் வளர்ச்சி பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நாரணமங்கலம் கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரளான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆலத்தூர் கேட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாரிவேந்தரை சந்தித்து, இலவச உயர்கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நக்க சேலம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடி புண்ணியம் என்பதற்காகவே, 1,200 மாணவர்களை தேர்ந்தெடுத்து பட்டதாரியாக்கியதாக கூறினார். ஊழல் செய்யாத, லஞ்சம் வாங்காத நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.