Published: MAR 29, 2024
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே தலைவர் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி பூனாம்பாளையம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பாரிவேந்தரை, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் . அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து, நம் நாட்டிற்கு பல பெருமைகளைத் தேடித் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பெரம்பலூர் தொகுதியில் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்கும் திட்டம் தொடரும் என்று அவர் அறிவித்தபோது பலத்த வரவேற்பு கிடைத்தது. மேலும், 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை தங்களின் SRM மருத்துவமனையிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு, அங்கு பாசனத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தளுதாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்தப் பலனும் இல்லை என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.