Published: MAR 29, 2024
கதிரவன் உதிக்கும் முன் விழித்து, தொகுதி நலனே தன் நலன் என்று உறுதி எடுத்துக்கொண்டு இடையறாது பணியாற்றி வந்தவர் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி டாக்டர் பாரிவேந்தர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் வெற்றி வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார்.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் தாளக்குடி பேருந்து நிலையம் பகுதியில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த வாக்காளர்களிடம் உரையாற்றிய பாரிவேந்தர், ''எங்கும் ஊழல், எதிலும் ஊழல், குடும்ப திமுகவினர் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பத்தாண்டுகள் சீரும் சிறப்புமாக ஊழலற்ற ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, அமைச்சரவையில் உள்ள எவர் மீதும் குற்றம் சாட்ட முடியாதபடி நேர்மையான ஆட்சி நடத்திவருகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களது தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்ட பாரிவேந்தர், தான் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரானால் காமராஜர் காலத்திலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள 50-ஆண்டு காலக் கனவு திட்டமான அரியலூர்-பெரம்பலூர் ரயில்வே திட்டம் உறுதியாகக் கொண்டு வரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய பாரிவேந்தர், 'மோடியின் கரத்தை வலுப்படுத்துவது, ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தியதுடன், தான் எம்.பி ஆனால் தாளக்குடிக்கு சமுதாயக்கூடமும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்டித் தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன பணிகள் செய்தேன் என்பதனை ஒரு School Student-இன் Progress Report Card போல மக்களுக்கு வழங்கியுள்ளேன் என்று கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தொகுதி வளர்ச்சி நிதியாக பெரம்பலூருக்கு வழங்கிய ₹ 17 கோடி மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக வகுப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை கட்டித் தந்ததாக தெரிவித்தார். திருமண மேடு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூகூர் கிராமத்தில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை தனது சொந்த செலவில் வெண்கல சிலையாக மாற்றிக் கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், மத்தியில் நல்லாட்சி நடத்திவரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை எனவும், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றினால் தான் ஜனநாயகம் தழைக்கும் எனவும் குறிப்பிட்டார்.