Published: MAR 29, 2024
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக 38 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நானும் ஐந்து ஆண்டுகள் அவர்களுடன் தான் நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளேன். நாடாளுமன்றத்தை நடத்த விட்டார்களா? நம் தமிழகத்தின் தேவையைக் கேட்டுப் பெற்றார்களா? மாநில உரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டும்.
ஆனால், திமுகவினருக்கு தமிழகத்தின் நிதித் தேவை பற்றியோ, வளர்ச்சி பற்றியோ, திட்டங்களை பற்றியோ கவலையில்லை. 'நாடாளுமன்றத்தை முடக்கி விட்டோம், நடத்தவிடாமல் செய்து விட்டோம். அதன் மூலம் மீடியா வெளிச்சத்தைப் பெற்று விட்டோம்' என விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இது அர்த்தமற்ற எதிர்ப்பு. சபையில் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் திமுக எம்பிக்களை அமைதிப்படுத்த பார்க்கிறார்கள். பிரதமர் சந்திக்க தேதி கேட்டால் உடனே கொடுக்கிறார். மத்திய அரசு நட்புடன்தான் செயல்படுகிறது.
எந்தக் காரணமும் இல்லாமல் திமுக எம்.பிக்கள் எதிர்ப்பதற்குக் காரணம், இந்தியா கூட்டணியில் இவர்களும் தலைவராக வர வேண்டும் என்ற ஆசைதான். உதாரணத்திற்கு GST வரவில்லை என்று சொல்கிறார்கள். வரியில் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். மாநில அரசுகளுக்கு GST ஒதுக்குவதில் பிரதமருக்கோ, நிதி அமைச்சருக்கோ பங்கு கிடையாது. அதற்கென தனி நிதி அமைப்பு உள்ளது.
அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக நிதி அமைச்சர், நிதி பங்கீடு தொடர்பாக கூட்டம் நடத்தி பின்பு தான் கையெழுத்திட செய்கிறார்கள். கையெழுத்து போட்டுவிட்டு வந்த பின்பு நிதி வரவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் தரவில்லை என்று தேர்தலுக்காகப் பேசுகிறார்கள். மத்திய அரசிடம் பணத்தை பெறுவதற்கு சில வரையறைகள் உள்ளன. ஏற்கனவே ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பணத்தை முறையாக செலவு செய்துள்ளார்களா என்பதை மத்திய அரசிடம் காட்ட வேண்டும். அதனை முறையாகச் செய்வதில்லை. அந்த விவரத்தைக் கொடுக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மழைநீர் வடிகால் பணிகளை முறையக்ச் செய்திருந்தால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொண்டால் வெள்ளம் வராது. சென்னையில் வெள்ளம் வரக் காரணம் Unplanned city. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் உரிமைத்தொகை பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள்.
நாட்டு மக்களுக்கு வருவாய் ஈட்டுகிற தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள். குடும்ப ஆட்சிக்கு விதை போட்டவர்களும் திமுகவினர் தான். ஊழலுக்கு விதை போட்டவர்களும் இவர்கள்தான். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும் இவர்கள் தான் ஆரம்பித்தார்கள். மற்ற மாநிலங்களில் ஓட்டுக்கும் பணம் கொடுக்கிறார்களா என மற்ற எம்.பிக்களிடம் கேட்டதற்கு 'இல்லை' என்று சொன்னார்கள். எல்லா குறைகளையும் இவர்கள் வைத்துக்கொண்டு மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல'' என்கிறார் பாரிவேந்தர்.